Nivar Cyclone; AIADMK, DMK Twitter trending: தமிழகத்தில் சரிபாதி பகுதி நிவர் புயலின் மிரட்டலில் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் இதிலும் நடத்துகிற ட்விட்டர் ட்ரெண்டிங் அரசியல் மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.
வங்கக் கடலில் உருவான நிவர் புயல், தமிழகத்தில் கரையைக் கடப்பது உறுதி ஆனது. இதையொட்டி முதல்வர் என்ற வகையில் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை மதியமே நிவாரண முகாம், செம்பரம்பாக்கம் ஏரி என விசிட் அடித்தார். இதையொட்டி அதிமுக ஐடி விங் தரப்பில் #களத்தில்EPS என ஹேஷ்டேக் உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.
பேரிடர் காலத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய வேண்டியது முதல்வர் மற்றும் அமைச்சர்களின் கடமை. இதை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்வதை புயல் பயத்தில் இருக்கும் மக்களோ, புயலுக்கு முன்பே சென்னையில் தண்ணீர் சூழப்பட்டு தவித்த மக்களோ நிச்சயம் ரசிக்கவில்லை.
ஆளும் கட்சி இப்படிச் செய்தால், ஆண்ட கட்சி சும்மா இருப்பார்களா? மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றதை குறிப்பிட்டு, #களத்தில்MKS_போஸ்டரில்EPS என தங்கள் பங்கிற்கு ஒரு ஹேஷ்டேக்கை உலவ விட்டனர். இரு தரப்பு கட்சிக்காரர்களும் தங்கள் ஹேஷ்டேக்கை இணைத்து ஒருவரையொருவர் வசைமாரி பொழிந்தனர்.
தமிழகமே பதற்றத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சூழலில் ஆளும்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் பொறுப்பு வேண்டாமா? இப்படியா நேரம், காலம் புரியாமல் டிரெண்டிங் விளையாட்டு நடத்துவது? என கட்சிசாரா நெட்டிசன்களும் பொதுமக்களுமே முகம் சுழிக்கிறார்கள். கட்சிக்காரர்களுக்கு இது புரியுமா?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"