தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான்-நிகோபார் தீவுகளில் நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
மேலும், தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், மற்றுமொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது, என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
கிண்டி, வடபழனி, கோயம்பேடு, பாரிமுனை, திருமங்கலம், அண்ணாநகர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணாசாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் காலை தொடங்கிய மழை விடாது பெய்து வந்தது.
புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விடாது தொடர்மழை பெய்தது.
இன்றும் சென்னையில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் நேற்று மிக கனமழை பதிவாகி உள்ளது.
அதிகபட்சமாக மெரினா கடற்கரை பகுதியில் 12 செ.மீ மழையும், அம்பத்தூரில் 9.5 செ.மீ மழையும், மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் 9.4 செ.மீ மழையும், கோடம்பாக்கத்தில் 8.5 செ.மீ., மழைப் பதிவானது.
தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 301 கன அடி நீர்வரத்து உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 104 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.
சென்னை மாவட்டத்தி்ல் 5 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 58 ஏரிகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 41 ஏரிகளும் நிரம்பியதாக நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கனமழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதேபோல் திருவள்ளூர், காரைக்கால், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த கற்ற தாழ்வு பகுதி, அடுத்த 6 மணி நேரத்தில் மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆந்திர கடலோரப் பகுதி அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை (நவ.16) வலுவடைய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாநில, மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசிகளுடனும், கூடுதலான அலுவலர்களுடனும் இயங்கி வருகின்றன. பொதுமக்கள், Whatsapp எண்.94458 69848 மூலம் புகார்களை பதிவு செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“