சென்னையில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த இரு தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று இரவு நல்ல மழை பெய்தது.
கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, அசோக் நகர், மேற்குமாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு, மயிலாப்பூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
குன்றத்தூர், தாம்பரம், அனகாபுத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், தாழ்வான பகுதிகள், முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதை அப்புறப்படுத்தும் பணியும் நடைபெற்றது.
சென்னையில் திடீர் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. நேற்று இரவு பெய்த மழையால் சென்னையில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 10.4 சென்டி மீட்டரும், சோழிங்கநல்லூரில் 8.2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
அதேபோன்று செம்பரம்பாக்கத்தில் 7 சென்டி மீட்டரும், திருவேற்காட்டில் 6.2 சென்டி மீட்டரும், மடிப்பாக்கத்தில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் இன்றும் (ஜுன் 18) சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
வரும் 22-ம் தேதி 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
22-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“