கொரோனா பாதிப்பு காரணமாக தமிழ் தொலைக்காட்சி ஊடகவியலாளர் மரணம் அடைந்தார். தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியான முதல் ஊடகவியலாளர் இவர்.
தமிழ் தொலைக்காட்சி சேனலான ராஜ் டி.வி.யில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் வேல்முருகன். இவர் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று (26-ம் தேதி) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது மரணத்திற்கு பத்திரிகையாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று சென்னையில் கால் பதித்ததுமே முன்களப் பணியாளர்கள் பலருடன் ஏராளமான பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும், ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். அவர்களில் பலர் நலன் பெற்று வீடு திரும்பினர்.
பத்திரிகையாளர்களுக்கான சிகிச்சை ஏற்பாடுகளை மருத்துவர்களுடன் இணைந்து சென்னை பத்திரிகையாளர் மன்றமும் செய்து வந்தது. இந்த நிலையில் கொரோனாவுக்கு தமிழகத்தில் முதன்முதலாக ஒரு பத்திரிகையாளர் பலியாகியிருப்பது அனைத்து தரப்பினரையும் வேதனையடைய வைத்திருக்கிறது.
திரு.வேல்முருகன் அவர்களது பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் என ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுப் பணியில் ஈடுபடும் ஊடகத்துறை துறை நண்பர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) June 27, 2020
”திரு.வேல்முருகன் அவர்களது பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் என ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுப் பணியில் ஈடுபடும் ஊடகத்துறை துறை நண்பர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
மூத்த ஒளிப்பதிவாளர் @RajtvNetwork வேல்முருகன் #Covid19-ல் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
முன்கள வீரர்களாகப் பணியாற்றும் ஊடகத் துறையினர் தங்களின் பாதுகாப்பிலும் கவனம் கொள்ள வேண்டும். pic.twitter.com/eJTaUbHW37
— M.K.Stalin (@mkstalin) June 27, 2020
”மூத்த ஒளிப்பதிவாளர் ராஜ் டிவி, வேல்முருகன் கொரோனாவால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
முன்கள வீரர்களாகப் பணியாற்றும் ஊடகத் துறையினர் தங்களின் பாதுகாப்பிலும் கவனம் கொள்ள வேண்டும்” என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ஊடகத்தாரும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
”மூத்த ஒளிப்பதிவாளர் திரு.வேல்முருகன் கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் என முன்களப் பணியாளர்களில் எவ்வித சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பும் இல்லாமல் இரவும் பகலுமாக பத்திரிகையாளர்கள் விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்- ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 200-ஐ நெருங்கியுள்ளது.
இந்த நிலையில் இன்றைய (27-06-2020) பொழுது கண்ணீருடன் விடிந்தது. தமிழன் தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சிகளில் பணியாற்றி ராஜ் தொலைக்காட்சியில் செய்தி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்த அருமைச் சகோதரர் திரு. E.வேல்முருகன் (வயது 41 )கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேல்முருகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் செய்தி தீராத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டு இன்னுயிர் நீத்த ராஜ் தொலைக்காட்சி செய்தி ஒளிப்பதிவாளர் திரு. E.வேல்முருகனின் மனைவி திருமதி.சண்முகசுந்தரி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். 12 வயதில் ஜீவா என்ற மகன் இருக்கிறார்.
சுமார் 20 ஆண்டு காலம் ஊடகத்துறையில் ஒளிப்பதிவாளாராகப் பணியாற்றிய திரு. E.வேல்முருகனின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. திரு. E.வேல்முருகனை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவரது துயரத்திலும் பங்கேற்கிறோம்.
இந்தத் துயரமான சூழலில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு பத்திரிகையாளர்கள் சார்பில் முக்கியமான கோரிக்கைகளை வேண்டுகோளாக வைக்கின்றோம்.
1.கொரோனா விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டு மறைந்த ஒளிப்பதிவாளர் திரு. E.வேல்முருகனின் குடும்பத்திற்கு கருணைத் தொகையாக ரூ.50 லட்சம் வழங்கிட வேண்டுகிறோம்.
2.மறைந்த ஒளிப்பதிவாளர் திரு. E.வேல்முருகனின் மனைவி திருமதி.சண்முகசுந்தரி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு நிரந்தர அரசுப் பணி வழங்கிட வேண்டுகின்றோம்.
இறுதியாக தமிழகத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வுப் பணியில் இரவும் பகலுமாக ஈடுபட்டு வரும் பத்திரிகையாளர்களுக்கு உடனடியாக காப்பீட்டுத் திட்டம் ஒன்றை உருவாக்கித் தரவும் வேண்டுகின்றோம்.
நம் சகோதரரை இழந்து தவிக்கும் பத்திரிகை ஊடக நண்பர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்போம். இனி ஒரு இழப்பை தாங்கும் சக்தி நமக்கில்லை.” என சென்னை பத்திரிகையாளர் மன்றம் தனது இரங்கலை தெரிவித்துள்ளது.