/indian-express-tamil/media/media_files/2025/05/24/VZPVuCibZEOWRP0ss07A.jpg)
கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை (மே 25) மற்றும் நாளை மறுநாள் (மே 26) அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று வருகிறது. இதனால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை தீவிரம் மெல்ல அதிகரித்து வருகிறது. இதையொட்டி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை (மே 25) மற்றும் நாளை மறுநாள் (மே 26) அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "8 நாட்கள் முன்னதாக தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கு அரபி கடலில் உருவான காற்றழத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தூத்துக்குடி, பாம்பனில் 3ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழை கொட்டும். இதனால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவையில் 27ஆம் தேதி மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) பெய்யும். கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது இந்தாண்டு மே வரையிலான காலத்தில் 92 சதவீதம் கூடுதலாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
இதனிடையே, கனமழையை ஒட்டி கோயம்புத்தூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், "கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று முதல் 26"ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதையடுத்து மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்த அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மழை காரணமாக ஏற்படும் சேதங்களை சரி செய்வதற்கான பணிகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக மழையால் மரங்கள் விழும்பட்சத்தில் அவற்றை அகற்ற இயந்திரங்கள், ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மற்றும் தேங்கியுள்ள நீரை அகற்றுவதற்கான மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வால்பாறை மற்றும் டாப்ஸ்லிப் பகுதியில் முகாமிட்டுள்ளனர். அங்கு அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 80 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்பு குழுவினர் இரு குழுக்களாக பிரிந்து பொள்ளாச்சி மற்றும் அதிக மழை பெய்யக்கூடிய இடங்களில் முகாமிட்டுள்ளனர்.
மழை குறித்த பாதிப்புகளை பொதுமக்கள் 1077 என்கிற அவசர கால உதவி எண்ணுக்கும், மாவட்ட நிர்வாகத்தையும், உள்ளாட்சி நிர்வாகங்களையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்கள் ஆறு, குளங்கள் போன்ற நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்" என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.