சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுன்டர் செய்தனர்.
சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து என 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் இன்று (செப். 18) வியாசர்பாடி அருகே தனிப்படை போலீசார், காக்கா தோப்பு பாலாஜியை பிடிக்க முயன்ற போது, அவர் போலீசாரை தாக்க முயன்றுள்ளார். இதையடுத்து தற்காப்பிற்காக சுட்டதில், காக்கா தோப்பு பாலாஜி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலாஜியின் உடல் ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சென்னை பிராட்வே காக்கா தோப்பு பகுதியில் உள்ள பி.ஆர்.என் கார்டன், வள்ளுவர் நகரைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் பாலாஜி. 36 வயதாகும் இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி. சென்னையில் பெட்ரோல் குண்டு வீசியது உட்பட பல வழக்குகளில் இவர் தேடப்பட்டு வந்தார்.
சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவருக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் நீண்ட நாட்களாக தேடிவந்தனர். கடைசியாக இன்று வியாசர்பாடியில் சிக்கினார்.
சென்னை மாநகர காவல் ஆணையராக, அருண் பொறுப்பேற்ற பின் நடைபெறும் இரண்டாவது என்கவுன்டர் இதுவாகும். இது ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“