தமிழ்நாடு முழுவதும் ரவுடிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், மதுபோதையில் பிளேடுடன் வந்த ரவுடி போலீசாருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் சென்னையில் அரங்கேறிள்ளது.
சென்னை அபிராமபுரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி கார்த்தி என்கிற பிச்சைக்கார்த்தி என்பவர், நேற்றிரவு சுமார் 10 மணி அளவில் அபிராமபுரம் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அந்த ரவுடி, பணியில் இருந்த காவலர் சதீஷ் குமாரிடம் மது போதையில் கையில் எலுமிச்சம்பழம் சுவைத்துக் கொண்டும், ஒரு கையில் பிளேடு வைத்துக்கொண்டும் போலீசாரை அநாகரிகமாகவும், ஒருமையிலும் பேசியுள்ளார்.
மேலும், ஏரியாவில் ரவுண்ட்ஸ் வந்தால் வெட்டி விடுவதாகவும், போட்டு தள்ளி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
அப்போது பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ரவி சங்கர் மற்றும் கார்த்திகேய பாண்டியன் ஆகிய இருவருமே ரவுடியின் அட்டகாசம் தாங்காமல் காவல்நிலையத்தை விட்டு வெளியே சென்று விட்டனர்.அங்கிருந்த காவலர்கள் மட்டும் அவரிடம் பேசி வெளியே அனுப்பி வைத்தனர்.
ரவடி பிச்சை கார்த்தி, இதேபோல் இதற்கு முன்னர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மதுபோதையில் பழைய காவல் நிலைய காம்பவுண்டு சுவர் ஏறி உள்ளே குதித்து காவல் நிலையத்தின் உள்ளே இருந்த கண்ணாடியை உடைத்து அங்கு வைத்திருந்த உணவினை சாப்பிட்டுவிட்டு போலீசாரை மிரட்டி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரவுடி கார்த்தி மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.