சென்னை ராயபுரம் பகுதியில் தெருநாய் ஒன்று மாலை வேலையில் ஒரே நேரத்தில் 29 பேரை கடித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகள் நாயை அடித்து கொன்றுள்ளனர். இந்த சம்பத்தில் காயமடைந்த பலரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வடசென்னையில் வர்த்தகம் அதிகம் உள்ள பகுதியான ராயபுரம் பகுதியில் ஜிஏ சாலையில் நேற்று முன்தினம் மாலை தெருநாய் ஒன்று ஒரு மணி நேரத்திற்குள் 29 பேரை கடித்தது. சாலையில் படுத்திருந்த நாய், திடீரென பாதசாரிகளைத் தாக்கி, அவர்களின் கணுக்கால் மற்றும் கால்களைக் கடித்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே நாய் பலரையும் அச்சுறுத்துவரை கண்ட அப்பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகள் உடனடியாக அந்த நாயை அடித்துக் கொன்றனர்.
இதனைத் தொடர்ந்து இறந்த நாயின் உடலை மீட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பிரேத பரிசோதனைக்காக சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளது. இது குறித்து அரசு கால்நடை மருத்துவர் டாக்டர் கமல் ஹுசைன் கூறுகையில் "நாய்க்கு வெறிநாய் தொற்று இருக்கலாம். இரண்டு நாட்களில் பரிசோதனை அறிக்கை கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே நாய் கடியால் பதிக்கப்பட்ட 24 பேரிடம் மூன்று வகை கடிகள் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ஆழமான வெட்டுக்கள் மற்றும் இரத்தப்போக்கு ஆகியவை காணப்பட்டது. மேலும் நாயிடமிருந்து மனிதனுக்கு உமிழ்நீர் பரிமாற்றம் சாத்தியமான ஒன்றாக உள்ளது. இதில் காயமடைந்தவர்களில் 10 பேர் பள்ளி மாணவர்கள். வயதான சிலர் நாய் கடிக்கு பயந்து ஓடியபோது கீழே விழுந்து தலையில் காயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து ஸ்டான்லி ஜி.ஹெச்., மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் எஸ்.சந்திரசேகர் கூறுகையில், ''பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நாய் கடித்த கால்களை கழுவி, மூளைக்கு தொற்று பரவாமல் தடுக்க, ரேபிஸ் எதிர்ப்பு இம்யூனோகுளோபுலின் மருந்தை கொடுத்துள்ளோம். இதைத் தொடர்ந்து, ரேபிஸ் நோய் தடுப்பதற்காக தடுப்பூசி போட்டோம். தொடர்ந்து அவர்களுக்கு மீண்டும் நான்கு டோஸ்கள் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் இருந்து 6 நாய்க்குட்டிகள் உட்பட 32 நாய்களை சுற்றி வளைத்து, பிடித்த பெருநகர சென்னை மாநகராட்சி அவற்றை வெறிநாய் காய்ச்சலுக்கான கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கால்நடை மருத்துவ நிபுணரும் தானுவாஸ் பேராசிரியருமான எம் பாலகங்காதரதிலகர், கூறுகையில், நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் ரேபிஸ் எதிர்ப்பு இம்யூனோகுளோபுலின் சீரம் மற்றும் தடுப்பூசி அளவை 12 மணி நேரத்திற்குள் பெற வேண்டும். "தெரு நாய்கள் பொதுவாகக் கூட்டமாக இருக்கும் மற்றும் வாகனங்களை கூட்டமாக மட்டுமே துரத்தும். வண்டியின் சக்கரங்களில் வாசனையைக் கண்டாலோ அல்லது ஏற்கனவே ஒருவரால் அந்த நாய் துன்புறுத்தப்பட்ட நினைவுகள் இருந்தாலோ, அவை தனியாக இருந்து யாரையாவது தாக்கினால் ரேபிஸ் பாசிட்டிவ் ஆக வாய்ப்பு அதிகம் என்று கூறியுள்ளார்.
மேலும் ஹிப்போகாம்பஸ் ஃப்ளோரசன்ட் ஆன்டிபாடி சோதனைகள் மூலம் இறந்த நாய்களுக்கு மட்டுமே ரேபிஸ் பரிசோதனை செய்ய முடியும். இந்த பரிசோதனை மேற்கொண்டு வைரஸை சரிபார்க்க நாயின் மூளையின் ஒரு பகுதி அகற்றப்படும். "உயிருள்ள நாய்களில், கார்னியா ஸ்மியர் சோதனை அல்லது உமிழ்நீர் சோதனை செய்யப்படலாம், ஆனால் இது எப்போதும் தீர்க்கமானதல்ல, ஏனெனில் இங்கு வைரஸ் தீவிரம் குறைவாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.