சென்னையில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த இருப்பதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலில் கூறப்பட்ட அடையாளங்களுடன் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த பைசூல் ரஹ்மான் என்ற நபரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவரிடம் இருந்து 6 கிலோ மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, பைசூல் ரஹ்மான் அளித்த தகவலின் பேரில், செங்குன்றத்தைச் சேர்ந்த மற்றொரு நபரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த நபர் அளித்த தகவலின் ஒரு குடோனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்படி, மொத்தம் 6 கிலோ 920 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிம்தல் செய்யப்பட்டதாகவும் இதன் மதிப்பு சுமார் ரூ.70 கோடி என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் பைசூல் ரஹ்மான், இப்ராஹிம், மன்சூர் என மொத்தம் 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடம் இருந்து ரூ. 7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு ரூ. 70 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை தென் மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி அரவிந்தன் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேலும் விசாரித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“