சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்றும், ஆர்ஜிதம் செய்த நிலத்தை விவசாயிகளிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சென்னை- சேலம் இடையே 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி சாலை அமைக்க சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1,900 ஹெக்டர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை கைவிடக் கோரி 5 மாவட்ட மக்கள் பல கட்ட போராட்டம் நடத்தினர்.
இந்த திட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் ஐந்து மாவட்ட விவசாயிகள், தர்மபுரி எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு விசாரணை செய்து வந்தது. இந்த திட்டத்திற்காக ஐந்து மாவட்டங்களிலும் நிலங்களை கையகப்படுத்த கூடாது என இடைக்காலமாக தடை உத்தரவு விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதேபோல, இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுசுழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கவில்லை என்றால் இத்திட்டத்தை தொடர மாட்டோம் என மத்திய அரசும் உத்தரவாதம் அளித்திருந்தது.
இதற்கிடையில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பொது மக்கள் துன்புறுத்தப்பட்டது குறித்து சிபிசிஐடி எஸ்.பி பிரவின் குமார் மேற்பார்வையில் டி.எஸ்.பி முருகவேல் விசாரணை நடத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் இறுதி விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி (14.12.2018) எடுத்துக்கொள்ளப்பட்டது. அனைத்து தரப்பிலும் இறுதி வாதங்களும் அன்று முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
மேலும், ஜனவரி 4-ம் தேதிக்குள் எழுத்துபூர்வ வாதங்களை அனைத்து தரப்பிலும் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று (08.04.2019) காலை தீர்ப்பு வழங்கினர்.
அதன்படி, 2018 மே மாதம் சேலம்- சென்னை 8 வழிச்சாலை தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம். அதாவது, சேலம், தர்மபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பாணை ரத்து ஆனது.
கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பிறகு புதிய அறிவிப்பாணை வெளியிட உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், ‘சென்னை - சேலம் 8 வழி சாலை திட்டத்துக்காக கையகப்படுத்திய நிலங்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை 8 வாரத்தில் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும். 2 ஆண்டுகளுக்கு கள ஆய்வு செய்து தான் இது போன்ற திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இந்த திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உள்ளது என்றும் நீதிபதிகள் கருத்து கூறினர். இந்த உத்தரவு பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.