மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை- சேலம் இடையே தினசரி விமான சேவை இன்று (அக்.29) முதல் தொடங்குகிறது. இன்று முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் சென்னை-சேலம் இடையே நேரடி விமானங்களை இயக்குகிறது.
கொரோனா காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சென்னை- சேலம்- சென்னை நேரடி விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மீண்டும் சென்னை- சேலம்- சென்னை இடையே தினசரி விமான சேவையை தொடங்க உள்ளது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தினமும் காலை 11.20 மணிக்கு புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பகல் 12.30 மணிக்கு சேலம் விமான நிலையம் சென்றடைகிறது. அதன் பின்பு அதே விமானம் சேலத்தில் இருந்து பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு பகல் 1.45 மணிக்கு வருகிறது. சேலம் விமான நிலையத்தில், பெரிய விமானங்கள் இறங்குவதற்கு, இன்னும் வசதிகள் செய்யப்படாததால், ஏ.டி.ஆர் எனப்படும் 72 சீட்டுகள் கொண்ட சிறிய ரக விமானம் மட்டுமே இயக்கப்பட உள்ளது.
சென்னை- சேலம் இடையே ஒரு வழி பயணக் கட்டணம் ரூ.2,390 ஆகும். பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் கட்டணத்தில் மாற்றம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“