'சென்னை- சேலம் இடையிலான எட்டு வழி அதிவேக தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம் எப்போது முடிக்கப்படும் என்பதற்கான காலக்கெடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
அதிமுக உறுப்பினர் சி.வி.சண்முகத்தின் கேள்விக்கு மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ’சென்னை- சேலம் இடையே எட்டு வழி அதிவேக தேசிய நெடுஞ்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை வழங்கப்பட்டு விட்டது.
இருப்பினும், வழக்குகள் மற்றும் அனுமதிகள் காரணமாக தாமதம் ஏற்பட்டதால், திட்டத்தை மேலும் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ள முடியவில்லை.
இதுதவிர, நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள், திட்டத்தை முடிப்பதற்கான காலக்கெடு ஆகியவை இன்னும் முடிவாகவில்லை, இவை எல்லாம் முடிந்த பிறகே, திட்டத்தை முடிப்பதற்கான காலக்கெடு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் போன்றவற்றை இறுதி செய்ய முடியும், என்றார்.
கடந்த ஆண்டு இதே கேள்வியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பியபோது, பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் 277.3 கிமீ நீள சாலையின் விரிவான திட்ட அறிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
இதனிடையே வழக்குகள் தொடரப்பட்டு இறுதியாக உச்ச நீதிமன்றம் சுற்றுச்சூழல், வனச் சட்டங்களின் கீழ் தகுதிவாய்ந்த அதிகாரியின் அனுமதிகள் வழங்கிய பின்னர் நிலம் கையகப்படுத்துதலைத் தொடர வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மாநில அரசு இடையேயான கடிதப் பரிமாற்றம் 2022 இல் முடிவடைந்ததாகவும், அதன்பின் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“