சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம்: நான்காவது நாளாக தொடரும் எதிர்ப்புப் போராட்டம்!

தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் மக்களின் போராட்டம் தொடர்கிறது

சேலம் – சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழி பசுமைச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. ஆனால், மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் மக்களின் போராட்டம் தொடர்கிறது. இன்று சேலத்தை அடுத்த காரிப்பட்டி, மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி ஆகிய பகுதிகளில் நில அளவீடு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இருளப்பட்டி கிராமத்தில் அதிகாரிகள் நில அளவீடு செய்ய முற்பட்ட போது, அதே கிராமத்தில் வசிக்கும் மூன்று குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலைக்கு முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

இதுபோல் போராட்டம் நடத்தும் பலரிடமும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், 8 வழிச் சாலை திட்டத்துக்கு நிலம் வழங்குபவர்களுக்கு 3 மடங்கு நிவாரணம் தரப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “மற்ற மாநிலங்களை விட தமிழகம் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அதிகம் பெற்றுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பு வசதி அவசியம். சாலை என்பது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும், சாலைகள் அகலப்படுத்தப்படுவதால் விபத்துகள் குறைகின்றன. 8 வழிச் சாலை திட்டத்துக்கு நிலம் வழங்குபவர்களுக்கு 3 மடங்கு நிவாரணம் தரப்படும்.

8 வழிச் சாலை திட்டம் குறித்து பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்” என அவர் கூறியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close