சென்னை - சேலம் பசுமை நில அளவை பணிகளை முடிக்காமல் திட்டத்தின் சாத்திய கூறுகள், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் 8 வழிச்சாலை திட்ட இயக்குனர் பதில் மனு தாக்கல்.
8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தருமபுரியை சேர்ந்த நில உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில் சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ளாமல் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கில் பசுமை வழிச்சாலை திட்ட இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனுவில், சென்னையில் இருந்து மேற்கு மாவட்டங்கள் செல்ல இரண்டு வழி சாலை போக்குவரத்து உள்ளது. அதில் சென்னை - திண்டிவனம்- உளுந்தூர்பேட்டை- சேலம் என 334 கி.மீட்டர் சாலை உள்ளது. மற்றொரு வழியான சென்னை - காஞ்சிபுரம் - வேலுர் - தர்மபுரி வழியாக செல்கின்றது.
இந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தடுக்கவே பசுமை வழிச் சாலை திட்டம் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு சுமார் 700 கோடி ரூபாய் அளவிற்கு எரிபொருள் செலவு மிச்சப் படுத்தப்படும், அவசர காலங்களில் திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்ட மக்கள் சென்னை அல்லது சேலத்திற்கு மருத்துவ வசதியை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக சுற்றுச்சூழல் அறிஞர்கள் மற்றும் பொறியியல் துறை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
வனப் பகுதி வழியாக சாலை அமைப்பது தொடர்பாக தலைமை வனப் பாதுகாவலரிடம் அனுமதி பெறபட்டுள்ளது.
தருமபுரி மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் தேசிய நெடுஞ்சாலை சட்ட விதிகளின் படி நிலம் கையகப்படுத்தபட்டு வருகின்றது.
சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டதையடுத்து நிபுணர்கள் குழு சில நிபந்தனைகளை பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு வழித்தடத்தை மாற்றுவதற்கு மறு ஆய்வு செய்ய வேண்டும்.
கல்வராயன் மலை வனப் பகுதியை தவிர்க்க செங்கிராம் முதல் சேலம் வரை சாலை மாற்றியமைக்கலாம்.
வனம் மற்றும் சரணாலயங்களில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிற்குள் சாலை அமைக்கவில்லை என்பதற்கான தடையில்லா சான்றிதழை தலைமை வன பாதுகாவளரிடம் பெற வேண்டும்.
277 கி.மீட்டர் சென்னை - சேலம் சாலை பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பை விரிவாக ஆய்வு செய்ய ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பத் ஐஐடி உதவி பேராசிரியரை கேட்டுக் கொண்டுள்ளோம். அவரும் இதனை ஏற்றுக் கொண்டார்.
இந்த நிபந்தனைகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், நில அளவை பணிகளை முடிக்காமல் திட்டத்தின் சாத்திய கூறுகள், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள முடியாது என்பதாலேயே தற்போது அந்த பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.