மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சென்னை - சேலம் பசுமை வழிசாலை திட்டத்திற்காக கையகப்படுத்தும் நிலங்களில் உள்ளவர்களை அப்புறப்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை - சேலம் இடையே அமைக்கப்பட இருக்கும் 8 வழி பசுமை வழி சாலை திட்டத்திற்காக சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1900 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு தடை விதிக்க கோரி நில உரிமையாளர்கள் மற்றும் பல்வேறு நபர்கள் சார்பில் பொது நல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது.
இந்த வழக்கு அனைத்தும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இத்திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணியின் போது பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதாகவும், இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அங்கு மன அழுத்தத்தில் உள்ள பொதுமக்களுக்கு அரசு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி 18 கிராம சபை கூட்டத்தில் இத்திட்டம் வேண்டாம் என மக்கள் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாக மனுதாரர் தரப்பிலும், நிலத்தை கையகப்படுத்தும் விவசாயிகள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், பொது மக்களுக்கு திட்டம் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மக்களை துன்புறுத்தல் செய்வதாக கூறும் மனுதாரர் குற்றச்சாட்டு தவறானது. நிலம் அளவிடும் பணிகளின் போது யாரையும் துன்புறுத்தவில்லை என தெரிவித்தார். தற்போதைய நிலையில் யாரையும் அப்புறப்படுத்த மாட்டோம் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் சாலை அமைக்கும் பணிகளுக்காக சாலையோர மரங்கள் வெட்டப்படுகின்றன. பணிகள் முடிவடைந்ததும் வெட்டபட்ட மரங்களுக்கு மாற்றாக நடப்படும் மரங்களை அரசு முறையாக பராமரிப்பதில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதனையடுத்து, உத்தரவிட்ட நீதிபதிகள் நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை பசுமை வழிசாலை திட்டத்திற்காக கையகப்படுத்தம் நிலங்களில் உள்ளவர்களை அப்புறப்படுத்த கூடாது. சாலை அமைக்கும் பகுதிகளில் உள்ள மரங்களை வெட்ட கூடாது. நில மேலும் சம்மந்தப்பட்ட நிலத்தில் நில உரிமைகள் அனுமதியின்றி அவர்களை இடையூறு ஏற்படுத்த கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.