சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தலாம்! - ஐகோர்ட் தீர்ப்பு

2013-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் 105-வது பிரிவு செல்லும்

8 வழிச்சாலைக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை – சேலம் எட்டுவழிச் சாலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத்தொடுத்தனர். அதில், தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1956 – படி நிலம் கையகப்படுத்தல் தொடர்பான அறிவிப்பானை அரசிதழில் வெளியான 21 நாட்களுக்குள் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சேபனையை தெரிவிக்கலாம். ஆனால், இச்சட்டத்தின்கீழ் பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தும் அவசியம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு மத்திய அரசு “நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறு வாழ்வு, மறு குடியமர்வு மற்றும் நிலம் கையகப்படுத்தலில் வெளிப்படைத்தன்மை” சட்டம் கொண்டு வந்தது.

அதன்படி, நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக அறிவிப்பாணை அரசிதழில் வெளியான 60 நாட்களுக்குள் மக்கள் கருத்து கேட்கப்பட வேண்டும் என்ற விதி இருக்கிறது.

2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தில் உள்ள பிரிவு 105-ன் படி, இந்த சட்டத்தின் அம்சங்கள் 13 பிற சட்டங்களுக்குப் பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. அந்த 13 சட்டங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1956 சட்டமும் ஒன்றாகும். இதனால் சமூக பொருளாதார தாக்க ஆய்வும், பொதுமக்கள் கருத்துக் கேட்பும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை என ஆகிறது.

இது மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமையை தடுப்பதாக உள்ளது. எனவே 2013-ம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 105 மற்றும் தற்போது நடைபெற்று வரும் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை சட்டவிரோதம் என அறிவித்து தடை விதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளோம்.

மேற்சொன்னவற்றால், சென்னை-சேலம் எட்டு வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை சட்ட விரோதமாக அறிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இதில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தலாம் என தீர்ப்பளித்துள்ளது. 2013-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் 105-வது பிரிவு செல்லும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close