சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ், ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், சென்னை சேலம் இடையே 8 வழிச்சாலைத் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி நிலத்தின் உரிமையாளர்கள், விவசாயிகள் மற்றும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்த தடை விதித்தது. மேலும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரங்களுக்குள் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனு நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையிலான கோடைக்கால சிறப்பு அமர்வு முன்பு இன்று(ஜூன்.3) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க மறுத்துவிட்டனர். மேலும், எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு ஜூலை முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.