தமிழகத்தில் இதற்கு முந்தைய திமுக ஆட்சியில் நடத்தியது போல, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கனிமொழியின் ஐடியாவான ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக ‘நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கனிமொழிக்கு திமுகவில் அடுத்த நெருக்கடியும் தொடங்கியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது கனிமொழியின் யோசனையாக பரிந்துரைக்கப்பட்ட சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு சென்னை மக்கள் மத்தியிலும் நாட்டுபுறக் கலைஞர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு இருந்தபோதும் அடுத்து வந்த அதிமுக அரசு சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தாமல் கைவிட்டது.
மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி 2006-2011 வரை தமிழக முதலமைச்சராக இருந்தபோது, கருணாநிதியின் மகளும் தற்போது திமுக எம்.பி.யுமான கனிமொழி மற்றும் பாதிரியார் ஜெகத் கஸ்பர் ராஜ் இருவரின் ஐடியாவாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் நாட்டுப்புறக் கலைஞர்களின் கலைநிகழ்ச்சி நடத்துவதற்கு ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி சென்னை மக்களுக்கு உற்சாகத்தை அளித்ததால் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே நேரத்தில், ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியில் வாய்ப்பு பெறுவதன் மூலம், நாட்டுப்புறக் கலைஞர்களும் பயனடைந்தால் அவர்கள் மத்தியிலும் வரவேற்பு இருந்தது. 2007ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட சென்னை சங்கமம் நிகழ்ச்சி, 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழக அரசு ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியை நடத்தாமல் கைவிட்டது. ஆனாலும், சென்னை மக்களும் நாட்டுப்புறக் கலைஞர்களும் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
தமிழகத்தில் பத்தாண்டுகளுக்கு பிறகு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமியில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. அதனால், சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் என்பதை உறுதி செய்யும் விதமாக, இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சென்னையில் ஏற்பாடு செய்திருந்த, ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுகவின் மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி பறை இசைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
இந்த சூழ்நிலையில்தான், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் சென்னையில் 3 நாட்களுக்கு ‘நம்ம ஊர் திருவிழா’ என்ற பெயரில், பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என செவ்வாய்க்கிழமை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக கலை பண்பாட்டு பேரவை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு பதிலாக நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நடக்கப்போகிறது என்றாலும், கனிமொழியின் ஐடியாவான சென்னை சங்கமம் நிகழ்ச்சி திமுக ஆட்சியில் தொடர்ந்து நடத்த முடியாமல் போனதால் அவர் வருத்தத்தில் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கனிமொழி ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சிக்கு காரணமானவர் என்று தெரிந்தும், தன்னிடம் எந்த ஆலோசனையும் கேட்காமல் தன்னிச்சையாக கலை பண்பாட்டுத் துறை சார்பில் ‘நம்ம ஊர் திருவிழா’ என்ற பெயரில் கலை நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது கனிமொழிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் சென்னையில் 3 நாட்களுக்கு ‘நம்ம ஊர் திருவிழா’ என்ற பெயரில், பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்ற தமிழக அரசு அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ள கனிமொழி “என் தலைமையில் நிகழ்ச்சி நடக்கக் கூடாதுன்னு சிலர் சதி பண்றாங்க…” என்று என தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், திமுகவில் ஸ்டாலினுக்கு பிறகு, உதயநிதி ஸ்டாலின்தான் முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக, கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு நெருக்கடி தொடங்கியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில், தமிழக அரசு இலங்கை தமிழர்களின் நலனுக்காக 300 கோடி ஒதுக்கிடு செய்து முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களின் மேம்பாடு குறித்தும் ஆய்வு செய்ய ஆலோசனை குழு அறிவித்தது. இந்த குழுவுக்கு தலைவராக சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், குழு உறுப்பினராக கலாநிதி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர். ஆனால், இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் திமுக எம்.பி கனிமொழி அந்த குழுவில் இடம்பெறவில்லை. தற்போது சென்னை சங்கமம் நிகழ்ச்சியும் இல்லாமல் போய்விட்டது. அதற்கு பதிலாக, ‘நம்ம ஊர் திருவிழா’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளதால் கனிமொழி அட்செட்டில் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கனிமொழி எம்.பி கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவைக்கு சென்றிருந்தபோது, கனிமொழி தலைமையிலான திமுக மகளிர் அணியில் சேரும் இளம் பெண்களை திமுக இளைஞர் அணியில் சேர்க்கப்பட்டனர்.
கோவையில் திமுக உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வரும் நிலையில், திமுகவின் மகளிர் அணியில் அதிகப்படியான இளம் பெண்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி கனிமொழி அறிக்கை வெளியிட்டார்.
கோவையில் திமுகவின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதியின் திமுக உறுப்பினர் சேர்க்க இயக்கம் நடைபெற்றுக்கொண்டிருந்த, அதே நேரத்தில், 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளம் பெண்களை கட்சியில் மகளிர் அணி உறுப்பினராக சேர்த்து அவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவது நம்முடைய கடமை” என்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை ட்வீட் செய்தார். ‘மகளிர் அணி’ என்ற வலியுறுத்தப்பட்டிருந்தது. “அரசியலில் ஆர்வமுள்ள இளம் பெண்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதுடன், கழகத்தின் எதிர்காலத்திற்கான அடித்தளம் வலுவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று கனிமொழி தெரிவித்தார்.
திமுகவின் இளைஞர் அணியில் பெண்களை சேர்த்தது கனிமொழிக்கு பிடிக்கவில்லை என திமுக வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. “இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கையின் போது இணைந்தாலும், மகளிரணிக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்படும்” என திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
இருப்பினும், கனிமொழி, உதயநிதி ஸ்டாலினுக்கு இடையே விரிசல் என்ற ஊகங்கள் ஆதாரமற்றவை என்று கூறுகின்றனர். இளைஞர் அணியில் பெண்களை சேர்க்க வேண்டும் என்ற யோசனை சில மாதங்களுக்கு முன்பே முன்வைக்கப்பட்டதாக மூத்த இளைஞர் அணித் தலைவர் ஒருவர் தெரிவித்தார். பல பெண்கள் இளைஞர் பிரிவி சேர விருப்பம் தெரிவித்தனர். கட்சித் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு பச்சைக்கொடி காட்டப்பட்ட பிறகே பெண்கள் இளைஞர் அணியில் சேர்க்கப்பட்டனர். ஆனால், யாரையும் இளைஞர் அணியில்தான் சேர வேண்டும் என்று வற்புறுத்தவில்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இதை திமுகவில் மகளிர் அணிக்கு இருக்கும் முக்கியத்துவத்தை குறைக்கும் நடவடிக்கையாகவே கனிமொழி ஆதரவு வட்டாரங்கள் கருதுகின்றனர். ஏற்கெனவே, கனிமொழியின் ஐடியாவான சென்னை சங்கமம் நிகழ்ச்சி பெயர் கைவிடப்பட்டு, ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, இப்போது, இளம் பெண்களை மகளிர் அணியில் உறுப்பினராக சேர்ப்பதற்கு பதிலாக, திமுக இளைஞரணியில் உறுப்பினராக சேர்த்திருப்பது கனிமொழிக்கு திமுகவில் அடுத்தடுத்து நெருக்கடி தொடங்கியுள்ளதாக கூறுகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.