பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலய திடலில் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.13)தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் புகழ்பெற்ற 250 கலைஞர்களின் இசை, நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஜனவரி 13 தொடங்கப்பட்ட நிலையில் சென்னையில் 18 இடங்களில் ஜனவரி 14 முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரையில், 4 நாட்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ நடைபெற உள்ளது.
அந்தவகையில் சென்னை சங்கமத்தின் முதல் நாள் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. தொடக்க விழாவில் கர்நாடக பாடகர் டி.எம்.கிருஷ்ணா பெரியார் குறித்து உணர்ச்சி பொங்க பாடினார்.
லுங்கி அணிந்து வந்து பாடிய கர்நாடக பாடகர் டி.எம்.கிருஷ்ணா, பெரியாரின் நற்பண்புகளையும் கொள்கைகளையும் உயர்த்தி பாடினார்.
பெரியாரை வர்ணித்து, "வண்டு போன்ற கருமையான கண்கள்" மற்றும் "கர்ஜிக்கும் புலியின் குரல்" என்றெல்லாம் பாடலில் வரிகள் சேர்த்து பாடினார்.
கிருஷ்ணா தான் யாரைப் பற்றிப் பாடுகிறார் என்பதை மக்கள் அறிகின்றனரா என்பதை உறுதி செய்ய பார்வையாளர்களுடன் உரையாடியபோது, பொதுமக்கள் 'பெரியார்' என்ற பெயரை பல முறை கூறி உற்சாகமாக பங்கேற்றனர்.
டி.எம்.கிருஷ்ணாவின் பெரியார் குறித்த பாடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூர்ந்து கவனித்ததும் குறிப்பிடத்தக்கது.