சென்னையில், பள்ளிக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை மாடு முட்டித்தள்ளிய காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுமி ஆயிஷாவின் உடல் நிலை நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் ஹர்ஷின் பானு, இவர் தனது 9 வயது மகள் ஆயிஷா மற்றும் 5 வயது குழந்தையை பள்ளி முடிந்து வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஆர்.பிளாக் இளங்கோ தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தப்போது அங்கு சென்று கொண்டிருந்த மாடு சிறுமி ஆயிஷாவை முட்டி தள்ளியது.
இதையும் படியுங்கள்: எலும்புக்கூடு-எலிகளுடன் போராட்டம் நடத்தும் விவசாயிகள்: திருச்சியில் பரபரப்பு
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் சிறுமியை காப்பாற்ற போராடினார். ஆனால் கீழே விழுந்துக் கிடந்த சிறுமியை மாடு தொடர்ந்து தாக்கிக்கொண்டே இருந்தது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் செங்கல் மற்றும் கட்டையை கொண்டு மாட்டை தாக்கினார். ஆனாலும் மாடு விடாமல் சிறுமியை தாக்கிக் கொண்டெ இருந்தது. சுமார் ஒரு நிமிடம் குழந்தையை தாக்கிய மாடு, பின்னால் இருந்து ஒருவர் கம்பால் அடித்து விரட்ட, குழந்தையை விடுவித்து ஓடியது. இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமிக்கு தலையில் 4 தையல்கள் போடப்பட்டது.
இந்த நிலையில், சிறுமி ஆயிஷா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் சக்கரவர்த்தி சிறுமியின் உடல் நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். ”சிறுமியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அதிர்ஷ்டவசமாக உடலுக்குள் எந்த வித பெரிய பாதிப்பும் இல்லை. வெளி காயங்கள் தான் உடலில் அதிகமாக உள்ளது. சிறுமி ஆயிஷாவின் உடல்நிலையை அடுத்த சில நாட்கள் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். இன்று மாலையே சிறுமி ஆயிஷா டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். மாடு முட்டியதால் குழந்தை சற்று பயத்தில் உள்ளார். இதன் காரணமாக உளவியல் மருத்துவரும் குழந்தையிடம் ஆலோசனை வழங்க உள்ளார். சிறுமி ஆயிஷா, சாதாரணமாக பெற்றோருடன் பேசுகிறார். உணவு எடுத்துக் கொள்கிறார். சிகிச்சைக்கும் ஒத்துழைப்பு தருகிறார்,” என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மாடு முட்டி குழந்தை அடிபட்ட சம்பவத்தில் மாட்டின் உரிமையாளர் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கவனக்குறைவாக செயல்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல், வீட்டில் வளர்க்கப்படும் உயிரினங்களால் ஆபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பொது இடங்களில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனிடையே மாடு முட்டியதால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவியை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil