தமிழ்நாடு முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று (நவ.29) இரவு கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. குறிப்பாக இரவு 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதலே, விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது.
இதனால் முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் மழை நீர் தேங்கி காணப்படுகின்றது. இதற்கிடையில் சென்னையில் புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது.
இதன் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (வியாழக்கிழமை) விடுப்பு அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு சென்னைக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், “தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்து வரும் 5 நாள்களுக்கு பல்வேறு இடங்களில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“