அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், ஜூலை 12 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 14 ஆம் தேதி கைது செய்தனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி மருத்துவமனைக்குச் சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சந்தித்து, அவரை ஜூன் 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையும் படியுங்கள்: செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்
பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை நடந்து முடிந்து, தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இந்தநிலையில், 14 நாட்கள் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை விசாரித்தப் பின்னர், ஜூலை 12 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து செந்தில் பாலாஜிக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil