இயற்கை கொடையான நீரை மதிப்போம், அதன் ஆதாரங்களை பாதுகாப்போம் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையை அடுத்த கொடுங்கையூரில், நாட்டிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ள மூன்றாம் நிலை ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் நீர் சுத்திகரிப்பு ஆலையை, முதல்வர் பழனிசாமி துவக்கிவைத்தார். இந்த சுத்திகரிப்பு ஆலையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குடித்து குடிக்க உகந்தது மற்றும் பாதுகாப்பானது என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார். இதே தொழில்நுட்பத்திலான ஆலை, கோயம்பேட்டிலும் விரைவில் அமைய உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
அமைச்சர் வேலுமணி இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, இயற்கை கொடையான நீரை மதிப்போம், அதன் ஆதாரங்களை பாதுகாப்போம். நீர் இன்றியமையாதது, அதனை வீணாக்காமல் இருப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இங்கு சுத்திகரிக்கப்படும் நீர், வட சென்னை பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்பட உள்ளது.
தினமும் 45 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் இந்த ஆலை ரூ.348 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையின் மூலம், சென்னையின் குடிநீர் பற்றாக்குறை ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்குன்றம் ஏரி மற்றும் மீஞ்சூர் சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்து நீர் பெறும் பகுதிகளுக்கு, இந்த ஆலையின் மூலம் தண்ணீர் வழங்கப்பட உள்ளது.
சென்னையில் நாள் ஒன்றுக்கு 550 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உருவாக்கப்படுகிறது. தற்போதைய நிலையில், அதில் 20 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி முறையில் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.