திங்கள்கிழமை சேப்பாக்கம் மைதானத்தில், பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, தேசியக் கொடியை அவமதித்த உதவி ஆய்வாளர், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், திங்கள்கிழமை (அக்: 23) நடந்த உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டியில் பாகிஸ்தா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் அதிக அளவில் மைதானத்திற்கு வருகை தந்தனர்.
சில ரசிகர்கள் தேசியக் கொடியுடன் மைதானத்திற்குள் நுழைய முயன்றபோது, விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் உள்ள கேட் 4 அருகே பணியில் இருந்த அதிகாரி, அவர்களை தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய திருவல்லிக்கேனி மாவட்ட காவல் ஆணையர் (DCP) தேஷ்முக் சேகர் சஞ்சய், கொடிகளை எடுத்துச் செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும், பணியில் இருக்கும் போலீஸார் சர்ச்சைக்குரிய கொடிகள் மற்றும் பேனர்களை மட்டுமே கவனிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
’ரசிகர்கள் கொடிகளை ஏந்திச் செல்வதற்கு எந்த தடையும் இல்லை. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, இரண்டு ரசிகர்களை தேசியக் கொடியை ஏந்திச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய அதிகாரி, பின்னர் அதை அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் போட முயன்றார். பின்னர் சுதாரித்துக் கொண்டு அதை மீண்டும் கையில் எடுத்தார். நாங்கள் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டோம், அதிகாரி கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார், என்று தேஷ்முக் சேகர் சஞ்சய் கூறினார்.
இதனிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போலீசாரை கடுமையாக சாடினார்.
சேப்பாக்கத்தில் இன்றைய போட்டிக்கு இந்தியக் கொடியை ஏந்தியபடி ரசிகர்களை மைதானத்திற்கு வெளியே போலீசார் அனுமதிக்கவில்லை. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது? என்று அவர் ட்வீட்டரில் கேள்வி எழுப்பினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“