ஆன்லைனில் கேம் விளையாடுவதை பெற்றோர் தடுத்ததால், வீட்டிலிருந்து நகைகளை எடுத்துக் கொண்டு, நேபாளத்திற்கு செல்ல முயன்ற சிறுவனை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 15 வயதான மாணவர் ஒருவர், 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தந்தை மெட்ரோ வாட்டர் ஒப்பந்ததாரர், தாய் கல்லூரி பேராசிரியை.
அந்த மாணவர், வீட்டில் எப்போதும் ஆன்லைன் கேம் விளையாடி வந்ததுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அவனது பெற்றோர் மாணவரை கேம் விளையாட விடாமல் கண்டித்துள்ளனர்.
இதனால், மனமுடைந்த அந்த மாணவர் கடந்த 17 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மகனை காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரை தேடியுள்ளனர். எங்கு தேடியும் மகனை காணாததால், வீட்டில் உள்ள பீரோவை சோதனை செய்தபோது, பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பீரோவில் இருந்த 213 பவுன் நகை மற்றும் 33 லட்சம் ரூபாய் காணாமல் போயிருந்தது.
இதனையடுத்து அவர்கள் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர். சிறுவனை கண்டுபிடிக்க காவல்துறையினரால், தனிப்படை அமைக்கப்பட்டது.
காவல்துறையின் சைபர் கிரைம் காவலர்கள் சிறுவனின் மொபைல் தாம்பரத்தில் உள்ள ஒரு இடத்தில் உள்ளதை கண்காணித்தனர். உடனடியாக காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனைக் கண்டுபிடித்தனர். அவனிடம் இருந்து நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது.
அந்த மாணவன் சென்னையிலிருந்து நேபாளம் செல்ல விமான டிக்கெட்டை முன்பதிவு செய்ததாகவும், விமானத்தில் அதிக அளவு நகை கொண்டு செல்ல முடியாததால், சிறுவன் நகையின் ஒரு பகுதியை அடகுக் கடையில் அடகு வைக்க முயன்றதாகவும், காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் ஒரு புதிய மொபலை வாங்கி மாணவன் மீண்டும் ஆன்லைனில் கேம் விளையாடி வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிறுவனைப் பிடித்த பிறகு, போலீசார் அவரை மீண்டும் வண்ணாரப்பேட்டைக்கு அழைத்து வந்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். நகை மற்றும் பணம் மாணவரின் குடும்பத்தாரிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil