அறிவியல் கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது ரோபோ. நம்ம ஊரைப் பொறுத்தவரை ரஜினியின் எந்திரன், 2.0 ஆகிய திரைப்படங்கள் மூலம் கடைக்கோடி கிராம மக்களுக்கும் இந்த ரோபோ பரிச்சயமாகிவிட்டது.
தனி மனிதன் செய்யும் அனைத்து வேலைகளையும் இவைகள் செய்வதால், வசதி இருப்போர் தங்களுக்கு உதவியாக இதனை வாங்கிக் கொள்கின்றனர். சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களில் ‘ரோபோட்டிக் தீம்டு ரெஸ்டாரென்ட்’ வகை உணவகங்களையும் காணலாம்.
சரி, இது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் முன்பெல்லாம் ரோபோ உள்ளிட்ட மற்ற எந்த அறிவியல் கண்டுபிடிப்பு என்றாலும் முதலில் நமக்கு நினைவுக்கு வருவது, அமெரிக்கா தான். தற்போது இந்த நிலை மாறி வருகிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபாடு காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களில் இயங்கும் வெவ்வேறு பள்ளிகளின் மாணவர்கள் இணைந்து, போக்குவரத்து விழிப்புணர்வையும், பணிகளையும் செய்யும் 'ரோடியோ’ என்ற ரோபோவை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பில் ஆறாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கெடுத்துள்ளனர். 'ரோபோட்டிக்' துறை சார்ந்த வல்லுநர்களின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோவை, ஏற்கனவே சென்னை நகர போக்குவரத்து காவல்துறையினர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
போக்குவரத்துத் துறையில் ரோடியோவின் பங்களிப்பு என்ன தெரியுமா? சிக்னலில் மக்கள் காத்துக் கொண்டிருக்கும்போது, 'மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, போக்குவரத்து விதிகளை மதித்து செயல்பட வேண்டும், போன்ற விழிப்புணர்வு காணொளியை ஒளிபரப்புவது, வாகனங்களை நிறுத்தி, மக்கள் சாலையைக் கடக்க உதவுவது' போன்ற உதவிகளை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
இதைப் படிக்கும் உங்களுக்கு ரோபோவைப் பற்றிப் படிக்க வயது வரம்பு ஏதும் உள்ளதா என்ற கேள்வி எழலாம். இதற்கு பதிலளித்த 'ரோடியோ' ரோபோவை உருவாக்கிய மாணவர்களின் வழிகாட்டியாக இருந்த சந்திரகுமார், '7 வயது முதல் 40 வயது வரை மொத்தம் 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அவர்களிடம் பயின்று வருவதாகத்' தெரிவித்தார்.
2012-ல் தொடங்கப்பட்ட இவர்களது நிறுவனம், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. அதோடு பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா என இந்தியா முழுவதும் 65 கிளைகளுடனும், ஆஸ்திரேலியாவிலும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தவிர, ஆசிரியர்கள் இல்லாமல் அனிமேஷன் வீடியோ மூலம் மாணவர்கள் அவர்களாகவே கற்றுக்கொள்ளும் படி, சந்திரக்குமாரின் நிறுவனம் செயல்பட்டு வருவது இதன் சிறப்பம்சம்.