சென்னை புறநகர் பகுதிகளில் இன்று காலை அதிக அளவிலான பனி மூட்டம் காணப்பட்டதை ஒட்டி, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் அதிகாலை விமானங்கள் தாமதமானது.
செவ்வாயன்று, இரண்டு சர்வதேச விமானங்கள் உட்பட மூன்று விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. பனிமூட்டம் காரணமாக சுமார் 10 விமானங்கள் தாமதமாகின.
அடிஸ் அபாபா மற்றும் துபாயில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்குவதில் தாமதமானதால், விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.
காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை பிற வருகைகள் தாமதமானது மற்றும் விமானிகள் வானிலை தெளிவடையும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
மும்பையில் இருந்து மூன்று விமானங்களும், விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத்தில் இருந்து ஒரு விமானமும் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தன.
நேற்று காலையும் தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஆலந்தூர், மீனம்பாக்கம், படப்பை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் சாலையே தெரியாத அளவிற்கு பனி மூட்டம் சூழ்ந்திருந்தது.
கடும் பனி மூட்டம் காரணமாக அதிகாலையில் ஓடுபாதை தெரியாத அளவிற்கு சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நேற்று காலை 8 மணிக்கு பெங்களூருவில் இருந்து வந்த விமானம், காலை 8.10 மணிக்கு அடிஸ் அபாபா நகரில் இருந்து வந்த எத்தியோப்பியா விமானம், காலை 8.15 மணிக்கு துபாயில் இருந்து சென்னை வந்த விமானம் ஆகியவை ஒடுபாதை தெளிவாக தெரியாததால் தரை இறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் இந்த விமானங்கள் தரை இறங்க முடியாமல் பெங்களூரூ விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டன.
பின்னர், திருப்பி அனுப்பப்பட்ட மூன்று விமானங்களும் பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு சென்னையில் தாமதமாக தரை இறங்கியது.