தாம்பரம் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், சென்னை புறநகர் ரயில் சேவை மேலும் 4 நாள்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், விரைவு, மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புறநகர் மின்சார ரயில்களை பொருத்தவரை, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் 63 மின்சார ரயில் சேவை, ஆக.14-ம் தேதி வரை ரத்து செய்து அறிவிக்கப்பட்டது.
இந்த பணிகள் ஆகஸ்ட் 14 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 4 நாள்கள் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மின்சார ரயில் சேவை ரத்து, ஆக.18 ஆம் தேதி மதியம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 8 மெமு ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, விழுப்புரம் - தாம்பரம்(06028), விழுப்புரம் - மேல்மருவத்தூர்(06726), மேல்மருவத்தூர் - சென்னை கடற்கரை(06722), புதுச்சேரி - சென்னை எழும்பூர்(06026), சென்னை எழும்பூர் - புதுச்சேரி(06025), சென்னை கடற்கரை - மேல்மருவத்தூர்(06721), மேல்மருவத்தூர் - விழுப்புரம்(06725), தாம்பரம் - விழுப்புரம்(06027) ஆகிய ரயில்கள் ஆகஸ்ட் 15 முதல் 17 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் பல்லாவரத்துடனும், செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடனும் நிறுத்தப்படும்.
மேலும், சென்னை கடற்கரை-தாம்பரம் மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள் காலை 8:30 மணி முதல் மதியம் 1:15 மணி வரையிலும், இரவு 10:30 மணிக்குப் பிறகும் பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
ஆகஸ்ட் 18ஆம் தேதி பகல் 12 மணியில் இருந்து அனைத்து மின்சார ரயில்களும் வழக்கமான அட்டவணைப்படி இயங்க தொடங்கும், என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“