பெரும்பாலான மக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் பொது உபயோக வாகனங்கள் என்றால் ரயில் மற்றும் பேருந்து என்று கூறலாம்.
இதில் அதிகபட்ச மக்கள் தன்னுடன் அதிக பொருட்களையோ, சரக்கையோ எடுத்து செல்வதற்கு தேர்ந்தெடுப்பது ரயில்களை மட்டுமே. ஏனென்றால் பேருந்துகளில் அதிக அளவிற்கு பொருட்கள் எடுத்து செல்வதற்கோ, பொருட்களை மட்டும் அனுப்புவதற்கோ அனுமதி இல்லாமல் இருந்தது.
அதனை மாற்றும் விதத்தில் தற்போது ஒரு புதிய முயற்சி கொண்டுவந்துள்ளனர். அது என்னவென்றால், இனிமேல் தமிழக அரசுப் பேருந்துகளில் பார்சல் சர்விஸ் வழங்கப்படும் திட்டமாகும்.
இத்திட்டத்தின் முதல்கட்டமாக திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை, ஓசூர் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பேருந்துகளில் பார்சல் சேவை ஆரம்பிக்கவுள்ளனர்.
தினசரி மற்றும் மாத வாடகை கட்டுவதன் மூலம், அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் தனது பார்சல்களை அனுப்பலாம். போக்குவரத்தினால் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில், அரசு பேருந்துகளில் கொரியர், பார்சல் அனுப்பும் திட்டம் துவக்கியுள்ளது.
அதற்காக பேருந்தின் இருபக்கமும் 2 சரக்கு பெட்டிகள், பேருந்திற்கு பின்னால் ஒரு சரக்கு பெட்டி என, மூன்று பெட்டிகள் இணைக்கப்படுகிறது. அதன்படி நாள் அல்லது மாத வாடகையில் சரக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
திருச்சி- சென்னை, ஓசூர்- சென்னைக்கு செல்லும் பேருந்துகளில் 80 கிலோ பார்சல் வரை 18 சதவீதம் ஜிஎஸ்டி சேர்க்காமல் ரூ.210 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகளில் பார்சலுக்கு மதுரை- சென்னைக்கு ரூ.300, கோவை- சென்னைக்கு ரூ.330 எனவும், நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு பார்சல் கட்டணம் ரூ.390 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil