CHENNAI Tamil News: சென்னை பெருநகர காவல்துறை சென்னை, தாம்பரம், ஆவடி என மூன்று காவல் ஆணையரகங்களாக தமிழ்நாடு அரசால் பிரிக்கப்பட்டுள்ளது. இது திமுகவின் பல வருட கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், கடந்த பட்ஜெட் சட்டசபை கூட்டத் தொடரில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கையின் போது முன்மொழியப்பட்டு, 3 ஆணையரகங்களாக ஆக பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நிர்வாக வசதிக்காகத் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், இந்த மூன்று காவல் ஆணையரகங்களில் தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு ரவி, சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டனர். பின்னர், அவர்களே இந்த இரண்டு ஆணையரகத்திற்கும் கமிஷனர்களாக செயல்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த இரண்டு ஆணையரகத்திற்கும் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, காவல் ஆணையரகங்களுக்கு தேவைப்படும் புதிய ஆயுதங்கள், தற்காப்பு கவசங்கள், வாக்கி டாக்கிகள் வாங்கப்பட்டு வருகின்றன. இதில், குறிப்பிடும்படியாக போலீசார் பயன்படுத்தும் வாகனம் உள்ளது.
ஆவடி, தாமபுரம் காவல் ஆணையகரத்திற்கு வாங்கப்பட்ட இந்த புதிய போலீஸ் கார்கள் புதிய தோற்றத்துடன் அதிக வசதிகள் இருக்கும் வகையில் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. எப்போதும் சென்னையில் காணப்படும் வெள்ளை நிற, நீல நிற அல்லது அடர் மெரூன் நிற கார்களுக்கு பதில் இந்த புதிய சிவப்பு நிற கார்கள் வாங்கப்பட்டுள்ளது.
இது போன்ற கார்கள் லண்டன் போன்ற பெரு நகரங்களில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக 'பேட்ரோல்' அதாவது ரோந்து பணியில் இருக்கும் போலீஸார் இந்த வாகனங்களை பயன்படுத்துவர்.
இந்த சிவப்பு கார்களில் ஆணையரக பெயர்கள் புதிய போல்ட் பார்மெட் எழுத்துக்களில் வித்தியாசமாக எழுதப்பட்டுள்ளது. போலீசாரின் ரோந்து பணிக்காக இந்த கார்கள் களமிறக்கப்பட்டு உள்ளதாகவும், இரண்டு ஆணையரகங்களுக்கும் 20 புதிய ரக ரோந்து வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வழங்க உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கார்கள் நேற்று சென்னை சாலைகளில் தென்பட்ட நிலையில், பார்ப்போர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், இந்த கார்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது. இந்த கார்கள் குறித்து காமெண்ட் செய்து வரும் இணைய வாசிகள், அடர் சிவப்பு நிறத்தில் மஞ்சள் கோடுகளோடு களமிறக்கப்பட்டு இந்த புதிய கார்கள் ஃபாரின் ஸ்டைலில் இருக்கிறது என்றும், செம ஸ்டைலாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.