Chennai: சென்னை திருவான்மியூர் பகுதியில் அமைத்துள்ள பிரபல காசா கிராண்ட் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தாழம்பூர் பகுதியில் காசா கிராண்ட் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு ஸ்மார்ட் டவுன் என்கிற அடுக்குமாடி குடியிருப்பை கட்டியது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக வீட்டு பட்டா கேட்டு வீடு வாங்கியவர்கள் காசா கிராண்ட் நிறுவனத்தை நாடியுள்ளனர். பட்டா தராமலும், ஆவணங்களை வழங்காமலும் அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுக்குமாடி குடியிருப்பு உள்ள நிலம் அனாதீனத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், தொடர்ந்து 5 வருடமாக பட்டா மற்றும் ஆவணங்களை கேட்டு வரும் வீடு வாங்கியவர்களுக்கு காசா கிராண்ட் நிறுவனம் அலைக்கழித்து வருவதால், 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். முதலில் குடியிருப்பு வாசிகள் தாழம்பூர் பகுதியில் உள்ள சாலையில் போராட்டம் நடத்திய நிலையில், திருவான்மியூரியில் உள்ள தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் காசா கிராண்ட் நிறுனம் வரி ஏய்ப்பு செய்ததாக அண்மையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“