சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு தினசரி இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் 8 பெட்டிகளை கொண்டுள்ளது. இதில் கூடுதலாக 8 பெட்டிகள் சேர்த்து 16 பெட்டிகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு அதே நாள் மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறு மார்க்கமாக, எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலியை அடைகிறது.
இந்த ரயிலில் 7 ஏசி சேர் கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர்கார் பெட்டியும் என மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து, 6 நாட்கள் இயங்கப்படும் இந்த ரயில் மொத்தமுள்ள 650 கி.மீ தூரத்தை 7 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடைகிறது.
இந்த ரயில் சேவை தொடங்கியது முதல் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டத்திற்கு விரைவாக செல்லும் வகையில் உள்ளதாக இந்த ரயில் வரவேற்பு பெற்றது.
குறிப்பாக முக்கிய நாட்களில் டிக்கெட் விரைவாக முடிந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு செல்கிறது. எனவே, இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் பேரில், தெற்கு ரயில்வே வணிகப் பிரிவின் கோரிக்கையில் இந்த ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் சேர்த்து 16 பெட்டிகளாக மாற்ற ரயில்வே தெற்கு ரயில்வே போக்குவரத்து பிரிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
16 பெட்டிகளாக மாற்றப்படுவதற்கான அதிகராப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“