சென்னையில் இருந்து தென் மாவட்டமான திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் சென்னை ஐ.சி.எஃப்பில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதிநவீன வசதிகளுடன் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் விரைவாகச் சென்று பயண நேரத்தைக் குறைக்கிறது. எக்ஸ்பிரஸ் மற்றும் இதர ரயில்கள் போல் அல்லாமல் குறைவான நிலையங்களில் மட்டுமே ரயில் நின்று செல்கிறது.
சாய்வு இருக்கைகள், அகலமான ஜன்னல்கள், முழுவதும் ஏசி, தானியங்கி கதவுகள், வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் எனப் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது வரை நாடு முழுவதும் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில் சென்னை-கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் பயணிகள் போக்குவரத்து அதிகம் நிறைந்த தென்மாவட்ட வழித்தடத்திலும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி சென்னை- திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. சென்னை- திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை ஆக்ஸ்ட் மாத இறுதியில் தொடங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆரம்பத்தில் 8 பெட்டிகளை கொண்டதாகவே இந்த ரயில் இயக்கப்படும் என்றும் பயணிகளின் வருகைகைப் பொறுத்து கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தற்போது சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்ல 10 மணி நேரம் ஆகிறது. வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் போது 2 மணி நேரம் குறையும். அதாவது பயணி நேரம் 8 மணி நேரமாக குறையும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய 4 ரயில் நிலையங்களில் மட்டுமே ரயில் நின்று செல்லும் என்று கூறப்படுகிறது.
சென்னை- நெல்லை இடையே இயக்கப்படும் இந்த ரயிலில் ஒரு பெட்டி முழுவதுமாக விஐபிகளுக்காக ஒதுக்கப்பட உள்ளது. பிற பெட்டிகளில் ஒரு பக்கம் 3 சீட்களும் மற்றொரு பக்கம் 2 சீட்களும் அமைக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் அதிகபட்சமாக 552 பயணிகள் வரை பயணிக்க முடியும். சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயிலில் பயணிக்க நபர் ஒருவருக்கு ரூ. 1,200 முதல் 1,300 வரை கட்டணமாக வசூலிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
நெல்லையில் இருந்து காலை 6 மணி அளவில் புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 2 முதல் 2.30 மணிக்குள் சென்னை வந்தடையும் என்றும் சென்னையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணியளவில் நெல்லை சென்றடையும் என்றும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”