ஜோலார்பேட்டை மக்களுக்கு ஓர் நற்செய்தி… சதாப்தி எக்ஸ்பிரஸ் இனி நின்று செல்லும்!
சென்னை முதல் பெங்களூரு வரை இயக்கப்படும் ரயில் எண் 12027 மற்றும் 12028 கொண்ட சதாப்தி எக்ஸ்பிரஸ், இனி ஜோலார்பேட்டையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Chennai - Bengaluru Shatabdi Express to halt at Jolarpet railway station Tamil News: இந்திய ரயில்களில் முக்கிய ரயிலாக "சதாப்தி எக்ஸ்பிரஸ்" உள்ளது. சுமார் 150 கி.மீ வேகத்தில் பயணிக்கூடியது இந்த ரயிலில் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் (UR - Unreserved coaches) கிடையாது. ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. முழுவதும் ஏ.சி வசதி கொண்ட ரயிலாக, பயணிகளுக்கு தேவையான குடிநீர், ஜூஸ், காபி அல்லது டீ, உணவு உள்ளிட்டவை பயணத்தின் போதே அளிக்கப்படுகிறது.
Advertisment
நாடு முழுவதும் 21 சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் சென்னையில் இருந்து 3 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவை சென்னை சென்ட்ரல் முதல் கோயம்புத்தூர், சென்னை சென்ட்ரல் முதல் பெங்களூரு, சென்னை சென்ட்ரல் முதல் மைசூரு ஆகியவையாகும்.
ஜோலார்பேட் மக்களுக்கு நற்செய்தி
இந்நிலையில், ஜோலார்பேட்டை மக்களுக்கு தெற்கு ரயில்வே மகிழ்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், சென்னை முதல் பெங்களூரு வரை இயக்கப்படும் ரயில் எண் 12027 மற்றும் 12028 கொண்ட சதாப்தி எக்ஸ்பிரஸ், இனி திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னையில் இருந்து புறப்படும் ரயில் இரவு 8.14 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை வந்தடையும். அங்கிருந்து 8.15 மணிக்கு புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து வரும் போது காலை 7.49 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும். அங்கிருந்து 7.50 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
இதனை சி.என்.அண்ணாதுரை எம்.பி., கே.தேவராஜி எம்.எல்.ஏ., ஆகியோர் தொடங்கி வைத்தனர். பல ஆண்டுகளாக திருவள்ளூர், அரக்கோணம் (வேலூர்), ஜோலார்பேட்டை (திருப்பத்தூர்) என மூன்று மாவட்டத்தை சேர்ந்த மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்த நிலையில், தற்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil