பயணிகள் வருகை குறைவாக இருப்பதால் கோவை - சென்னை இடையே இயக்கப்பட்டு வரும் சதாப்தி சிறப்பு ரயில்கள் டிசம்பா் 1ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாா்ச் 25ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இருப்பினும், வெளிமாநிலங்களில் தங்கி வேலை பார்த்து வந்த புலம் பெயர் தொழிலாளர்கள், படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதற்காக மத்திய அரசு மே 1ம் தேதியில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்கியது.
இதற்கிடையே, தமிழகத்தில் செப்டம்பர் 7ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. முதல்கட்டமாக 7 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னர், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை, கோவை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மேட்டுப்பாளையத்துக்கு ரயில்கள் இயக்கப்படும் என்றும், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை மற்றும் செங்கோட்டைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்தது.
சென்னை - கோவை சதாப்தி ரயில்கள் சேவை, செவ்வாய்க்கிழமை தவர்த்து வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்பட்டு வந்தன.
தற்போது, பயணிகளின் வருகை குறைவாக இருப்பதால் கோவை - சென்னை (ரயில் எண்: 06027), சென்னை - கோவை (ரயில் எண்: 06028) ஆகிய 2 சதாப்தி சிறப்பு ரயில்கள் சேவையை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.
பொதுவாக, கோவை– சென்னை இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன.