scorecardresearch

நியூஸ் பேப்பர், டீ, டிஃபன்… சென்னை- கோவை வந்தே பாரத் கட்டண மாறுபாடு; காரணம் இதுதான்!

எக்ஸிகியூட்டிவ் சேர் கார் வகுப்பு கட்டணமாக ரூ.2,310 ஆகவும், ஏசி சேர் கார் வகுப்பு கட்டணம் 1,215 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

vande bharat
Vande-Bharat Express

சென்னைக்கும் கோயம்பத்தூரிற்கும் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையில், கட்டணம் மாறுபட்டுள்ளதால் அதற்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி வைத்தார். வாரத்தில் 6 நாட்களுக்கு (புதன்கிழமை தவிர) இயக்கப்படும் என்றும், இதில் 7 ஏசி பெட்டிகளும், ஒரு ஏசி எக்ஸிகியூட்டிவ் பெட்டியும் பொருத்தப்பட்டிருந்தது.

தற்போது வந்தே பாரத் ரயில் கட்டணத்தில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் எக்ஸிகியூட்டிவ் வகுப்பு கட்டணம் ரூ.2,485 என்றும், ஏசி சேர் கார் வகுப்பு கட்டணமாக ரூ.1,365 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோயம்புத்தூரில் இருந்து சென்னை பயணிக்கும்போது, எக்ஸிகியூட்டிவ் சேர் கார் வகுப்பு கட்டணமாக ரூ.2,310 ஆகவும், ஏசி சேர் கார் வகுப்பு கட்டணம் 1,215 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை – கோயம்புத்தூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் அடிப்படைக் கட்டணம் ரூ.1,900, உணவு கட்டணம் ரூ.349, முன்பதிவு கட்டணம் ரூ.60, அதிவிரைவு கட்டணம் ரூ.75, ஜிஎஸ்டி ரூ.101 என மொத்தம் 2,485 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏசி சேர் கார் வகுப்பில் அடிப்படைக் கட்டணம் ரூ.941, உணவு கட்டணம் ரூ.288, முன்பதிவு கட்டணம் ரூ.40, அதிவிரைவு கட்டணம் ரூ.45, ஜிஎஸ்டி ரூ.51 என ரூ.1,365 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில் சேவையில், செய்தித்தாள், தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

அதேநேரம், சென்னையில் இருந்து பகல் 2.25 மணிக்குப் புறப்படும் ரயிலில் மாலை செய்தித்தாள், தேநீர், ஸ்நாக்ஸ் மற்றும் இரவு உணவும் வழங்கப்படுகிறது. அதனால் எக்ஸிக்யூட்டிவ் வகுப்பில் ரூ.175-ம், ஏசி வகுப்பில் ரூ.150-ம் அதிகமாக உள்ளது.

எனவே, வந்தே பாரத் ரயிலில் இரு மார்க்கத்திலும் உணவுக் கட்டணம் அதிகரிப்பைத் தவிர மற்ற கட்டணங்களில் வித்தியாசமில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai to coimbatore vande bharat train fare changes details