நாட்டிலே மிகவும் பரபரப்பான விமான நிலையமாக சென்னை விமான நிலையம் இருந்து வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும், உள்நாட்டில் உள்ள நகரங்களுக்கு தினந்தோறும் ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 164 பயணிகள், 8 விமான ஊழியர்கள் உட்பட 172 பேருடன் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிறுத்தப்பட்டது. எந்திரக் கோளாறு காரணமாக விமானம் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டு, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்ட பிறகு, ஓடுபாதையில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டது. பிறகு விமானப் பொறியாளர்கள் குழு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கோளாறை ஆய்வு செய்தனர். ஆனால், அவர்களால் பிரச்னைக்கு தீர்வு காண முடியாததால், விமானம் 7 மணி நேரத்திற்கு மேலாக தாமதம் ஆனது. இதனால், விமானம் இன்று மாலை 5 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டது.
அனைத்து 164 பயணிகளும் விமான நிலைய ஓய்வறைகளுக்கு மாற்றப்பட்டனர். விமானம் பழுதுபார்க்கும் போது விமான நிலைய அதிகாரிகள் உணவு மற்றும் பிற வசதிகளை வழங்கினர். விமானத்தில் கோளாறு கண்டறியப்பட்ட உடனேயே விமானி அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“