தீபாவளி பண்டிகையையொட்டி தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கான விமான கட்டணம் பல படங்கு உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அதன் தொடர்ச்சியாக, வார இறுதி நாள்கள் வரும் நிலையில் தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் தங்கியுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
பண்டிகை நாள்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னையின் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், பலர் தங்கள் சொந்த வாகனங்கள் மூலமாகவும், விமான சேவையை பயன்படுத்தியும் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
பண்டிகை நாள்களில் தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுவது போல், விமான சேவையிலும் அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல சாதாரண நாள்களில் சுமார் ரூ. 4,300-ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.11,749 முதல் ரூ.17,745 வரை உயர்ந்து காணப்படுகிறது.
இதேபோல், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்ல சாதாரண நாள்களில் ரூ.4,109 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.8,976 முதல் ரூ.13,317 வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் விலை உயர்வால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“