இந்தியா மற்றும் மியான்மர் இடையேயான இருதரப்பு உறவுகளின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில், சென்னை மற்றும் யாங்கூன் (மியான்மர்) இடையே முதல் நேரடி விமான சேவை நேற்று (சனிக்கிழமை) தொடங்கப்பட்டது. மியன்மார் ஏர்வேஸ் இன்டர்நேஷனல் சனிக்கிழமைதோறும் சென்னை-யாங்கூன், யாங்கூன்- சென்னை இடையே விமானங்களை இயக்கும்.
இது யாங்கூனில் (8M630) இருந்து காலை 8 மணிக்கு (மியான்மர் நேரப் படி) புறப்பட்டு இந்திய நேரப்படி காலை 10.15 மணிக்கு சென்னை வந்தடையும். பின்னர் மீண்டும் சென்னையில் இருந்து (8M631) காலை 11.15 மணிக்குப் புறப்பட்டு மாலை 3.15 மணிக்கு (மியான்மர் நேரப்படி) யாங்கூன் சென்றடையும்.
சென்னை- மியான்மர் இடையே நேரடி விமான சேவை வழங்கும் மியான்மர் ஏர்லைன்ஸில் மொத்தம் 98 இருக்கைகள் உள்ளன. 6 பிசினஸ் வகுப்பு இருக்கைகள் மற்றும் 92 எக்னாமிக் வகுப்பு இருக்கைகள் கொண்டுள்ளன. மூத்த அதிகாரிகள், பங்குதாரர்கள் மற்றும் பயணிகள் முன்னிலையில், சென்னை விமான நிலைய இயக்குநர் எஸ்.எஸ்.ராஜூ, மியான்மர் கெளரவ தூதர் பேராசிரியர் ஜே.ரங்கநாதன் ஆகியோர் விமான சேவையை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். யாங்கூனில் இருந்து சென்னை வந்த (8M630) விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப் பட்டது.
யாங்கூனில் இருந்து 48 பயணிகளுடன் முதல் விமானம் சென்னைக்கு வந்தது. பின்னர் 70 பயணிகளை ஏற்றிக் கொண்டு விமானம் யாங்கூன் புறப்பட்டுச் சென்றது. புதிய விமானம் இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை அளிக்கும் வகையிலும் வர்த்தகம் மற்றும் பிற துறை மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், யாங்கூனின் வளமான கலாச்சார பாரம்பரியம், பிரமிக்க வைக்கும் இயற்கை காட்சிகள் மற்றும் சுவையான உணவுகள் ஆகியவற்றை பெற இந்த சேவை எளிதாகவும் வசதியாகவும் இருக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“