தெற்கு ரயில்வே சார்பில் நான்காவது தண்டவாளம் அமைக்கும் பணிகளால் சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஏப்ரல் 26-ம் தேதி முதல் 3 மாதத்திற்கு ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் அறிவித்திருப்பதாவது: “தெற்கு ரயில்வே துறை சார்பாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் நான்காவது ரயில் இருப்புப் பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் சுரங்கப் பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. 26.04.2024 இரவு 10 மணி (ரயில்வே நேரம் 22) முதல் 3 மாத காலத்திற்கு ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒரு வழி பாதையாக பின்வரும் செயல்பாட்டிற்கு வரும்:
*ராயபுரம் பாலம் மற்றும் ராஜாஜி சாலையிலிருந்து காமராஜர் சாலையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (போர் நினைவிடம் நோக்கி) அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக அவை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அணுகு சாலை - வடக்கு கோட்டை சாலை (NFS Road) - ஆர்.ஏ. மன்றம் - முத்துசாமி சாலை டாக்டர் முத்துசாமி பாலம் - வாலாஜா பாயிண்ட் கொடி மர சாலை- போர் நினைவுச் சின்னம் வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.
*காமராஜர் சாலையிலிருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக வழக்கம் போல் இயக்கப்படும்.
அனைத்து வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“