முன்னாள் குடியரசுத் தலைவரும், பா.ஜ.க மூத்த தலைவருமான வெங்கையா நாயுடுவின் பேரன் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கவுள்ளது. இந்தத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) சென்னை வருகை தருகிறார்கள்.
டெல்லியில் இருந்து மாலையில் அமித்ஷா புறப்படுகிறார். இரவு 7 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர், சாலை மார்க்கமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்திற்கு செல்ல உள்ளார். அதன்பின்னர் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்து, டெல்லி செல்லவுள்ளார்.
இதேபோல், துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கர் மாலை 4.55 மணியளவில் சென்னை வருகிறார். பின்னர், காது கண் கேளாதோர் முட்டுக்காட்டில் உள்ள தேசிய நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு கருத்தரங்கில் பங்கேற்கிறார். பின்னர், வெங்கையா நாயுடுவின் பேரன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். மீண்டும் இரவு சென்னை விமான நிலையம் வந்து டெல்லி புறப்படவுள்ளார்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் சென்னை வருகை ஒட்டி சென்னை விமான நிலையம், அவர்கள் தங்கி செல்ல உள்ள கிண்டி கவர்னர் மாளிகை, அவர்கள் பயணிக்கும் வழித்தடங்களை சிவப்பு மண்டலமாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. எனவே, இந்த இடங்களில் 'டிரோன்', ஏர் பலூன் போன்றவற்றை பறக்கவிடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை விமான நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு (இ.சி.ஆர்.) செல்லும் வாகன ஓட்டிகள், பழைய மாமல்லபுரம் சாலையை (ஓ.எம்.ஆர்.) மாற்றுப்பாதையாக பயன்படுத்தி செல்லலாம். குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து வணிக வளாகங்களும், விமான நிலையம் முதல் இ.சி.ஆர். வரை உள்ள சாலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.