Chennai Tamil News: இந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, சென்னை தியாகராய நகரில் 8ஆம் தேதியில் இருந்து 24ஆம் தேதி வரை போக்குவரத்திற்கான பாதை மாற்றப்படுகிறது.
சென்னை தியாகராய சாலை - தணிகாசலம் சாலை சந்திப்பில் இருந்து, ரோகிணி சிக்னல் சந்திப்பு, வடக்கு உஸ்மான் சாலை - கோட்ஸ் சாலை சந்திப்பு, வடக்கு உஸ்மான் சாலை - மகாராஜபுரம் சந்தானம் சாலை சந்திப்பு, பிருந்தாவன் - கண்ணம்மாபேட்டை சந்திப்பு ஆகிய பாதைகளில் இருந்து பனகல் பூங்கா செல்ல தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில், ஜி.என்.செட்டி சாலை, தியாகராய சாலை, தணிகாசலம் சாலை, பன்னடுக்கு வாகன நிறுத்துமிடங்கள் தவிர, பிரகாசம் சாலை சென்னை மாநகராட்சி பள்ளி, பாஷ்யம் சாலை ராமகிருஷ்ணா, தண்டபாணி சாலை ராமகிருஷ்ணா பள்ளி வளாகங்களில் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
சரக்கு வாகனங்கள் மற்றும் வணிக ரீதியான வாகனங்களுக்கு இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை தியாகராய நகர் பகுதிக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. அதை தவிர வியாபார நேரத்தில் செல்லத் தடை விதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்துக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil