சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 19 வயது இளம்பெண் ஒருவர், சென்னை மாதவரத்தில் உள்ள தனது உறவினரை பார்க்கச் சேலத்தில் இருந்து பேருந்து மூலம் பிப்ரவரி 3 ஆம் தேதி இரவு சென்றுள்ளார். பின்னர் மாதவரம் செல்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தான் மாதவரத்தில் இறக்கி விடுவதாக கூறி அந்த பெண்ணை ஆட்டோவில் ஏறுமாறு கூறியுள்ளார். ஆனால், அந்த பெண் மறுக்கவே,கத்தியை காட்டி அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஓட்டுநர் ஏற்றியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கொஞ்ச தூரம் சென்ற பிறகு அடையாளம் தெரியாத இரண்டு பேர் ஆட்டோவில் ஏறியதாக கூறப்படுகிறது.
பின்னர் ஆட்டோ ஜி.எஸ்.டி. சாலை வழியாக இரும்புலியூர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது ஆட்டோவில் இருந்தவர்கள் அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் அந்த பெண் கத்தி கூச்சலிட்டபோது அருகே இருந்த குடியிருப்பு வாசிகள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் தாம்பரம் போலீசார் ரோந்து வாகனத்தில் சம்பந்தப்பட்ட ஆட்டோவை துரத்தி சென்றுள்ளனர். அப்போது நெற்குன்றத்தில் உள்ள ஒரு இடத்தில் பெண்ணை இறக்கிவிட்டு அதில் இருந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். பின்பு அந்த பெண்ணை மீட்ட போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடத்தப்பட்ட பெண் மேற்குவங்காளத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பல்லாவரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் அந்த ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ்செல்வன், தயாளன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.