முதல் முறையாக விசா விண்ணப்பங்களுக்கான காத்திருப்பு நேரத்தை குறைக்க, சென்னை, கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி மற்றும் ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் விசா நேர்காணல் தேவைப்படும் விண்ணப்பங்களுக்கு சனிக்கிழமைகளிலும் தூதரக செயல்பாடுகளைத் திறந்துள்ளன.
அமெரிக்க மிஷன் விசா நேர்காணல்களுக்காக கூடுதல் இடங்களைத் தொடர்ந்து திறப்பதாக அறிவித்துள்ளது.
விசா விண்ணப்பங்களுக்கான நேர்காணல்களை சனிக்கிழமைகளிலும் நடத்துவது என்பது, கோவிட்-19 காரணமாக விசா செயலாக்கத்தில் ஏற்பட்ட பின்னடைவை ஈடு செய்வதற்கான பல வகையான முயற்சியின் ஒரு பகுதி இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள் ஒரு செய்திக் குறிப்பில், “ஜனவரி முதல் மார்ச் வரை, விசா செயலாக்க திறனை அதிகரிக்க வாஷிங்டன் மற்றும் பிற தூதரகங்களில் இருந்து டஜன் கணக்கான தற்காலிக தூதரக அதிகாரிகள் இந்தியாவிற்கு வருவார்கள்” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த கோடையில், இந்தியாவில் அமெரிக்க மிஷன் முழு பணியாளர்களுடன் செயல்படும். மேலும், தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளில் விசாக்களை செயலாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரப்பூர்வ பக்கத்தில், “இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் குழு-முயற்சியால் சிறப்பு விசா நேர்காணல்கள் இந்தியா முழுவதும் சனிக்கிழமை நடத்தப்பட்டன. உலகெங்கும் உள்ள பணியாளர்களின் பங்களிப்புடன் அமெரிக்க தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்கள் பி1/பி2 நேர்காணல் காத்திருப்பு நேரத்தை குறைக்க ஓயாமல் உழைத்து வருகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”