சென்னையில் ஒரே சாலையில் மூன்றாவது முறையாக பள்ளம் ஏற்பட்ட நிலையில் குப்பை லாரி ஒன்றின் பின்பக்க சக்கரம் பள்ளத்தில் புதைந்தது.
சென்னை வளசரவாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் சமீபகாலமாக அவ்வப்போது சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு வருகிறது. அதனை களிமண் மற்றும் ரப் பீஸ் கொட்டி மாநகராட்சி ஊழியர்கள் சீர்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் அப்பகுதியில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில் அவ்வழியாக குப்பை லாரி சென்றபோது மீண்டும் சாலையில் பள்ளம் ஏற்பட்டு லாரியின் பின்பக்க சக்கரம் மண்ணில் புதைந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
சாலையில் சிக்கியுள்ள லாரியை மாநகராட்சி ஊழியர்கள் கிரேன் மற்றும் மற்றொரு லாரியை பயன்படுத்தி மீட்டனர். இதேபோல கடந்த மாதம் 10 அடி நீளம் 5 அடி அகலத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மீண்டும் ஒரு வாரத்திற்கு பின்பு ஒரு பள்ளம் ஏற்பட்டது.
இந்நிலையில் மீண்டும் மூன்றாவது முறையாக பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். மெட்ரோ வாட்டர் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்படும் மூடப்பட்ட பின்னர் தான் இது போன்று சாலையில் தொடர் பள்ளங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அத்துடன் வாகனங்கள் செல்லும் போது திடீர் பள்ளம் ஏற்பட்டு சிக்கி அசம்பாவிதம் ஏற்படுவதற்குள், இந்த சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“