சென்னை - எழும்பூர் இடையேயான புதிய வழித்தடம் சுமார் 280 கோடி ரூபாய் மதிப்பில் அமைகிறது. இந்த பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கப்பட இருக்கிறது.
இதன் காரணமாக சென்னை கடற்கரை- சிந்தாதிரிப்பேட்டை இடையிலான ரயில் சேவை இன்று முதல் அடுத்த 7 மாதத்திற்கு ரத்து செய்யப்படுகிறது. இந்த பணிகள் நிறைவுபெற்ற பிறகு ரயில் சேவை மீண்டும் பழையபடி தொடங்கும்.
இதனால் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து இன்று முதல் தினமும் கூடுதலாக 140 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை கடற்கரை-வேளச்சேரி இடையே 122 ரயில் சேவை இயக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 80 மின்சார ரயில் சேவை மட்டுமே இயக்கப்படும்.
இதேபோல் கும்மிடிப்பூண்டி, ஆவடி, அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரிக்கு செல்ல வேண்டிய 59 மின்சார ரயில் சேவைகள் கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும்.
வேளச்சேரியில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு முதல் ரயில் காலை 5 மணிக்கும் கடைசி ரயில் இரவு 10.15 மணிக்கும் இயக்கப்பட உள்ளது. இதேபோல் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு முதல் ரயில் காலை 5.40 மணிக்கும் கடைசி ரயில் இரவு 11.05 மணிக்கும் இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், மாலையில் 4.25 மணி முதல் 10.15 மணி வரையிலும் (பீக் அவர்ஸ் இல்) , ஒவ்வொரு 25 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில்களை இயக்கப்பட உள்ளது. பீக் அவர்ஸ் இல்லாத மற்ற நேரங்களில் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil