சென்னை பல்கலைக்கழ துணை வேந்தர் நியமனம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழக துணை வேந்தரை நியமனம் செய்வதற்காக தேடுதல் குழுவை நியமித்து தமிழ அரசு கடந்த செப்டம்பர் 13ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி இடம்பெறவில்லை என்பதால் இந்த தேர்வு குழு நியமித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் ஜெகன்நாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சென்னை பல்கலைக்கழக துணை வேந்தார் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநியை சேர்க்கும் வரைக்கும் துணை வேந்தர் நியமிக்கப்பட மாட்டார் என்பதற்கு உத்திரவாதம் அளித்து, ஆளுநரின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி தலைமை வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், துணைவேந்தர் குழுவை தமிழக அரசு நியமிக்கும் முன்பாகவே ஆளுநர் ஒரு தேடுதல் குழுவை நியமித்திருக்கிறார், அந்த குழுவில் பல்கலைக்கழக மானிய பிரதிநிதியும் சேர்க்கப்பட்டிருக்கிறார். அந்த குழு நியமித்ததை எதிர்த்து அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
அந்த வழக்கு ஜனவரி 23ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதுவரைக்கும் துணைவேந்தர் நியமனம் குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மட்டோம் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“