விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகளை வைத்து வழிபடும் பல்வேறு அமைப்பினருடன் மாநகர காவல்துறை சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு செய்வதற்கான அறிவுரைகள், வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் 4 மண்டல காவல் இணை ஆணையாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, இந்து அனுமன் சேனா, பாரதிய ஜனதா காட்சி, பாரத் இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத், உள்ளிட்ட பல அமைப்புகளை சேர்ந்த சுமார் 200 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில் வழிபாடு செய்வதற்கான நெறிமுறைகள் வழங்கப்பட்டன. “ விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சமந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெஞ்சாலைத்துறை அல்லது அரசுத் துறையிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
தீயணைப்புப்புதுறை, மின்வாரியம், ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். சமந்தபட்ட காவல் நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களை பூர்த்தி செய்து அனுமதி வாங்க வேண்டும்.
சிலைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த 2 தன்னார்வலர்களை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் எந்தவித அரசியல் கட்சிகள் அல்லது மதரீதியான தலைவர்களுக்கு ஆதரவான பேனர்கள் வைக்க கூடாது. விநாயகர் சிலைகளை பிற வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகே நிறுவுவதை தவிர்க்க வேண்டும். மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கம் மற்றும் கோஷங்கள் எழுப்ப கூடாது. சிலைகள் வைக்கப்படும் இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதற்கு அனுமதி இல்லை.
விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு போலீசார் அனுமதிக்கும் நாட்களில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே 4 சக்கர வாகனங்களில் எடுத்து சென்று அமைதியான முறையில் கரைக்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் உத்தரவுப்படி விதிகளை பின்பற்றி போலீசார் அனுமதிக்கும் நாட்களில் விநாயகர் சிலைகளை அமைதியான முறையில் ஊர்வலமாக எடுத்துசென்று நீரில் கரைக்க வேண்டும் என்று இந்து அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது” என்று இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“