/indian-express-tamil/media/media_files/2025/05/19/YB7c9ZY5cowxPXoIWIx1.jpg)
Chennai water ATM
சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் முதல் கட்டமாக 50 குடிநீர் ஏடிஎம்கள் தொடங்க உள்ளது.
சென்னை மாநகராட்சி பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மையான குடிநீர் வழங்கும் புரட்சிகரமான திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் 50 அதிநவீன குடிநீர் ஏடிஎம்களைத் தொடங்கி வைக்கவுள்ளார்.
கடற்கரை, பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சந்தைப் பகுதிகள் என மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் இந்த குடிநீர் ஏடிஎம்கள் நிறுவப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஏடிஎம்மிலும் 150 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் என இரண்டு அளவுகளில் குடிநீர் பெற்றுக் கொள்ள முடியும். பொதுமக்கள் தங்கள் கொண்டு வரும் தண்ணீர் பாட்டில்களில் சுத்தமான நீரைப் பிடித்துப் பருகும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் எண்ணற்ற பொதுமக்களுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏடிஎம்களில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் முன் வடிகட்டுதல், ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் (RO) மற்றும் புற ஊதாக் கதிர்கள் (UV) ஆகியவற்றைக் கொண்டு தேசிய தரத்திற்கு இணையான தூய்மையான நீரை வழங்குகின்றன.
மேலும், 24 மணி நேரமும் தடையின்றி செயல்படும் இந்த அமைப்புகள், எப்போதும் குளிர்ச்சியான மற்றும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட நீரை உறுதி செய்கின்றன.
பாதுகாப்பு, ஆரோக்கியம், நீண்ட கால பயன்பாடு மற்றும் எளிதான நிறுவுதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த ஏடிஎம் இயந்திரங்களின் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த செலவில் சுத்தமான குடிநீர் விநியோகம் இதன் சிறப்பம்சமாகும். தொட்டியில் நீரின் அளவு குறையும்போது அல்லது மின்னழுத்தம் குறைவாக இருக்கும்போதும் எச்சரிக்கை சமிக்ஞை காண்பிக்கப்படும்.
இருப்பு இல்லாத நிலையிலும் கடவுச்சொல் மூலம் நீரை ரீசார்ஜ் செய்யும் வசதி இதில் உள்ளது. மேலும், கடைசி 50 முறை ரீசார்ஜ் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் விவரங்களையும் பயனர்கள் பார்க்க முடியும். இந்த விநியோக அமைப்பு பேட்டரி மூலம் இயங்குவது கூடுதல் சிறப்பாகும். கட்டண வசூலில் துல்லியத்தன்மையை உறுதி செய்வதற்காக ஸ்மார்ட் கார்டு மற்றும் நாணயங்கள் பயன்படுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீர் ரீசார்ஜ் மற்றும் விநியோகம் தொடர்பான தகவல்கள் SMS மூலம் பயனர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.