தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்கள் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அரசும் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் தண்ணீர் பிரச்னையை தீர்க்க முயன்று வருகிறது.
இந்தநிலையில், ரஜினி மக்கள் மன்றத்தினர், ரஜினி படம் ஓட்டிய குடிநீர் லாரிகளின் மூலம் மக்களின் தண்ணீர் பிரச்னையை தீர்த்து வருகின்றனர். தண்ணீர் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை கண்டறிந்து மக்களுக்கு இலவசமாக தண்ணீர் வழங்கிவருகின்றனர்.
ரஜினி மக்கள் மன்றம் மத்திய சென்னை பகுதி செயலாளர் ராஜா இதுபற்றி கூறும்போது, தண்ணீர் பிரச்னை என்பது ஒரு சமூக பிரச்னை ஆகும். தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் உள்ள பகுதிகளை முதலில் கண்டறிகிறோம். தண்ணீர் வந்து 10 நாட்களுக்கு மேல் ஆன பகுதிகளை முதலில் இனம் கண்டறிந்து வருகிறோம். பின் மன்ற உறுப்பினர்களிடையே கலந்துரையாடி எந்தெந்த பகுதிகளில் உடனடியாக மக்களின் தண்ணீர் பிரச்னையை களையமுடியும் என்பதை ஆராய்ந்து களத்தில் இறங்கினோம். நாள்தோறும் இரணடு லாரிகளில் 48 ஆயிரம் லிட்டர் தண்ணீரை மக்களுக்கு விநியோகித்ததாக கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது, சென்னையில் மட்டுமல்லாது மாநிலம் எங்கும் தண்ணீர் பிரச்னை எங்கெங்கு அதிகம் உள்ளதோ, அப்பகுதிகளில் எல்லாம் ரஜினி மக்கள் மன்றத்தினர் மக்களுக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். லாரிகளின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வதற்கு தலைவர் ரஜினி எங்களுக்கு அனுமதி அளித்துள்ளார். எங்களது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அவர் உன்னிப்பாக கவனித்துவருகிறார். ரஜினி மக்கள் மன்றத்தின் மூலம் நடைபெறும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் நாங்கள் சோசியல் மீடியாக்களிலும் தலைமையிடமும் பதிவு செய்து வருவதாக ராஜா கூறினார்.
இந்த நடவடிக்கை முற்றிலும் சேவைமனப்பான்மையுடன் மட்டுமே நடத்தப்படுகிறது. இதில் எள்ளளவும் அரசியல் இல்லை என்று மதுரவாயல் பகுதி ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சுரேந்திர பாபு கூறியுள்ளார்.